மூடும் அபாயத்தில் அதரகல்ல பிரதேச மருத்துவமனை: மருத்துவர் இன்றி தவிக்கும் மக்கள் – யானை அச்சுறுத்தலால் மேலும் அவதி!

குருணாகல் மாவட்டத்தின் கல்கமுவ பகுதியில் அமைந்துள்ள அதரகல்ல பிரதேச மருத்துவமனை, போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் தற்போது மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.இந்த மருத்துவமனையில் இரண்டு தங்குமிட விடுதிகள் இருந்தபோதிலும், தற்போது நோயாளர்களை அனுமதிக்கும் நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்களில் வெளிநோயாளிப் பிரிவு இயங்காது என அறிவித்தல் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இங்கு இரு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருந்த போதிலும், ஒரு மருத்துவர் மகப்பேற்று விடுமுறையில் சென்றுள்ளார். தற்போது இருக்கும் ஒரு பெண் மருத்துவர் விடுமுறை எடுக்கும் நாட்களில் மருத்துவமனை முற்றாக முடங்குகிறது.அதரகல்ல பிரதேசம் அதிகளவில் காட்டு யானைகள் நடமாடும் பகுதியாகும். இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்காக மக்கள் நம்பியிருக்கும் ஒரே மருத்துவமனை இதுவேயாகும். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படாததால், தூர இடங்களில் இருந்து வரும் நோயாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.”காட்டு யானைகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உயிரைப் பணையம் வைத்து மருத்துவனைக்கு வந்தால், அங்கு மருத்துவர்கள் இல்லை. விடுமுறை நாட்களில் சிகிச்சையே கிடையாது. எமது உயிருக்கு யார் பாதுகாப்பு?” என பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.இந்த மருத்துவமனைக்கு உடனடியாக மேலதிக மருத்துவர்களை நியமித்து, 24 மணிநேரமும் தடையற்ற சேவையை வழங்க சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்கமுவ – அதரகல்ல பகுதி மக்கள் அவசரமாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *