புத்தாண்டு காலத்தில் பொதுமக்களை பாதுகாப்புடன் இருக்குமாறு வலியுறுத்தல்….

புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் தமது பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவ சமில் விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.குறிப்பாக வானவேடிக்கை மற்றும் பட்டாசு தொடர்பான நடவடிக்கைகளின் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும், சிறுவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.கடந்த ஜனவரி மாதம் பட்டாசு விபத்துக்களில் குறைவு காணப்பட்டதாகவும், அதேநிலையை இந்தப் பண்டிகைக் காலத்திலும் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், பண்டிகைக் காலத்தில் வீதி விபத்துக்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதால், பாதுகாப்பு குறித்து தீவிர கவனம் செலுத்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.அதிவேகமாக வாகனங்களைச் செலுத்துவது, தங்களை மரணத்திற்கு அருகில் கொண்டு செல்லும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எந்தவொரு காரணத்திற்காகவும் மது அருந்திவிட்டு வாகனம் செலுத்த வேண்டாம் என்றும் மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.அதேபோன்று, இந்தப் புத்தாண்டு காலத்தில் சுத்தமான உணவுகளை மாத்திரம் உட்கொள்ளுமாறும் வரட்சியான காலநிலையுடன் குடிநீர் பிரச்சினை காணப்படுவதால், முடிந்தவரை கொதித்தாறிய நீரை அருந்துமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இதனிடையே, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணிநேரமும் சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *