இந்திய நீதித்துறையில் ஊழல் நிலவுவதாகக் குறிப்பிடும் அத்தியாயத்தைக் கொண்டுள்ள பாடசாலை பாடப்புத்தகத்திற்கு இந்திய உயர் நீதிமன்றம் முழுமையான தடை விதித்துள்ளது.
மத்திய கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்காக இந்த திருத்தப்பட்ட சமூக விஞ்ஞானப் பாடப்புத்தகத்தை வெளியிட்டிருந்தது.
இந்தநிலையில், “நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” என்ற தலைப்பிலான அத்தியாயத்தில் இடம்பெற்றிருந்த சில கருத்துகளே இந்த சர்ச்சைக்குக் காரணமாகின.
குறித்த பாடப்புத்தகத்தில், நீதித்துறையின் பல்வேறு மட்டங்களில் ஊழல் நிலவுவதாகவும், வழக்குகளின் தேக்கம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
போதிய நீதிபதிகள் இல்லாமை, சிக்கலான சட்ட நடைமுறைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதே நீதி வழங்கலில் தாமதத்தை ஏற்படுத்துவதாக அந்தப் புத்தகம் சுட்டிக்காட்டியிருந்தது.
Accessing Justice: Step by Step – The Statesman
இந்த விவகாரத்தை விசாரித்த இந்திய தலைமை நீதியரசர் சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு, இந்தக் கருத்துகள் நீதித்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் “அதிர்ச்சியூட்டும்” விதமாக இருப்பதாகக் கண்டனம் தெரிவித்தது.
இதனையடுத்தே, இந்தப் புத்தகத்தை அச்சிடுவது, மறுபதிப்பு செய்வது அல்லது டிஜிட்டல் முறையில் பகிர்வது என அனைத்துக்கும் உயர் நீதிமன்றம் முழுமையான தடை விதித்துள்ளது.
இத்தகைய கருத்துகளைப் பாடப்புத்தகத்தில் சேர்த்தமைக்காக, கல்வித்துறையின் உயர்மட்ட அதிகாரி மற்றும் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக ஏன் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை சுமத்தமுடியாது என்று விளக்கம் கேட்டு நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.
நீதிமன்றத்தின் கடும் நிலைப்பாட்டைத் தொடர்ந்து, இது ஒரு “தவறான மதிப்பீடு” என்றும், கவனக்குறைவாக இந்த தவறு நடந்துவிட்டதாகவும் தெரிவித்து தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பகிரங்க மன்னிப்பு கோரியதுடன், புத்தகத்தை விநியோகத்திலிருந்து மீளப் பெற்றுக்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.
இந்த விவகாரம் இந்தியாவில் உள்ள சட்டத்தரணிகள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
