அமெரிக்காவின் க்ரீன் கார்ட் லொத்தர் இடைநிறுத்தம்

அமெரிக்க க்ரீன் கார்ட் லொத்தர் திட்டம் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்பின் வழிகாட்டுதலின் பேரில் இந்த திட்டத்தை இடைநிறுத்துமாறு அந்நாட்டின் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோம் தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அண்மையில் அமெரிக்காவின் ப்ரவுன் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்களைக் கொலை செய்த சந்தேகநபர் க்ரீன் கார்ட் லொத்தர் மூலமாகவே அமெரிக்காவிற்கு பிரவேசித்துள்ளார்.

இதனையடுத்தே அமெரிக்க ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் போர்த்துக்கல்லைச் சேர்ந்தவர் என்பதுடன் 2017 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையை பெற்றுள்ளார்.

குறித்த சந்தேநபர் தற்கொலை செய்து கொண்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் இன்று(19) செய்தி வௌியிட்டன.

இந்த விசா திட்டத்தினூடாக வருடாந்தம் 50 ஆயிரம் கிரீன் கார்ட் வீசாக்கள் லொத்தர் ஊடாக அமெரிக்காவில் அதிகம் பிரதிநிதித்துவப்படுத்தாத நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

2025 விசா லொத்தருக்கு சுமார் 20 மில்லியன் மக்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களில் வெற்றியாளர்களுடன் வாழ்க்கைத் துணையையும் சேர்த்து மொத்தமாக 131,000 க்கும் அதிகமானோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *