மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிசக்தி விநியோகச் சங்கிலியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில், ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வது குறித்து இலங்கை அரசாங்கம் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.தஹாகர்யனை நேற்று (13) வெளிவிவகார அமைச்சில் சந்தித்து இது குறித்து அவசர ஆலோசனைகளை நடத்தினார்.ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடைகள் தற்போது நீக்கப்பட்டுள்ள நிலையில், தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதிப்படுத்த இலங்கை இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.நாட்டின் தற்போதைய எரிபொருள் இருப்பைப் பாதுகாக்கவும், தொடர்ச்சியான விநியோகத்தைப் பராமரிக்கவும் ரஷ்யாவிலிருந்து மேலதிக எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் இங்கு வலியுறுத்தினார்.இலங்கையின் இந்தக் கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்துவதாகத் தூதுவர் உறுதியளித்தார். மேலும், எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கைக்கு உதவ ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் விநியோகத்தைப் பலப்படுத்த ரஷ்யாவுடன் இலங்கை அவசரப் பேச்சுவார்த்தை!
