கியூபா கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்கப் படகு மீது கியூபா பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.இந்தச் சம்பவத்தால் அமெரிக்கா மற்றும் கியூபா இடையே மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.கியூபாவின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள ‘காயோ பால்கோன்ஸ்’ (Cayo Falcones) தீவு அருகே புதன்கிழமை காலை இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.புளோரிடாவில் பதிவு செய்யப்பட்ட அதிவேகப் படகு ஒன்று கியூபா எல்லைக்குள் நுழைந்ததை அடுத்து, எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதனை இடைமறிக்க முயன்றுள்ளனர்.கியூபா உள்நாட்டு விவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாதுகாப்புப் படையினர் படகை நெருங்கியபோது, அதிலிருந்தவர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இதில் கியூபா கொமாண்டர் ஒருவர் காயமடைந்துள்ளார்.பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், அமெரிக்க படகில் இருந்த நால்வர் உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவத்தை “படுகொலை” என வர்ணித்துள்ள புளோரிடா காங்கிரஸ் உறுப்பினர் கார்லோஸ் கிமெனெஸ், இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.மேலும், பாதிக்கப்பட்டவர்களில் அமெரிக்கப் பிரஜைகள் உள்ளனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே அரசியல் பதற்றம் நிலவி வரும் சூழலில், தனது கடல் எல்லை மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க கியூபா உறுதியாக இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
கியூப படையினர் அமெரிக்கப் படகு மீது துப்பாக்கிச் சூடு – நால்வர் பலி!…
