அமெரிக்காவின் அதிரடி வரி மாற்றம்: உலக வர்த்தகத்தில் குழப்பம்

அமெரிக்கா செவ்வாய்க்கிழமை முதல் 10 சதவீத புதிய உலகளாவிய இறக்குமதி வரியை (Global Import Tariff) தற்காலிகமாக வசூலிக்கத் ஆரம்பித்துள்ளது.எனினும், இந்த வரி வீதத்தை 15 சதவீதமாக உயர்த்துவதற்கு ட்ரம்ப் நிர்வாகம் முயற்சித்து வருவதால், சர்வதேச வர்த்தகர்களிடையே பெரும் குழப்பம் நிலவுவதாக ரொயிட்டர்ஸ் செய்திய வெளியிட்டுள்ளது.கடந்த வாரம் அமெரிக்க உயர் நீதிமன்றம், ட்ரம்ப் நிர்வாகம் அவசரகாலச் சட்டத்தின் கீழ் விதித்திருந்த வரிகளை இரத்துச் செய்தது.இதனைத் தொடர்ந்து, 150 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் 10 சதவீத வரியை விதிக்கும் உத்தரவில் ட்ரம்ப் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டார்.ஆனால், சனிக்கிழமை அன்று அந்த வரி வீதத்தை 15 சதவீதமாக உயர்த்துவதாக அவர் அறிவித்திருந்தார்.எனினும், 15 சதவீத உயர்வுக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் ட்ரம்ப் இன்னும் கையெழுத்திடாததால், அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை தற்போது 10 சதவீத வரியையே வசூலிக்க ஆரம்பித்துள்ளது.இந்த நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, முன்னதாக சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்ட வரிகளை வட்டியுடன் திரும்பப் பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் ஆரம்பித்துள்ளன.இவ்வாறு சுமார் 175 பில்லியன் டொலர் வரிப்பணம் மத்திய வருவாயாக வசூலிக்கப்பட்டிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.”அரசாங்கம் சட்டவிரோதமாக மக்களிடம் வரி வசூலித்துள்ளது, அந்தப் பணத்தை உடனடியாகத் திருப்பித் தர வேண்டும்” என வர்த்தக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.இந்த நிலையில், அமெரிக்காவுடன் ஏற்கனவே 15 சதவீத அடிப்படை வரி ஒப்பந்தம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, இந்த 10 சதவீத வரி விதிப்பு ஒரு புதிய சவாலாக அமைந்துள்ளது. எனினும், வர்த்தக உடன்படிக்கைகளை அமெரிக்கா மதிக்கும் என நம்புவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.மேலும், அமெரிக்காவின் இந்த ஒருதலைப்பட்சமான வரி விதிப்பு முறையைக் கைவிடுமாறு சீனா வலியுறுத்தியுள்ளதுடன், மீண்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.இந்த வரி அறிவிப்புகளால் உலகளாவிய பங்குச் சந்தைகள் ஆரம்பத்தில் சரிவைக் கண்ட போதிலும், அமெரிக்காவின் தொழில்நுட்பப் பங்குகள் மீண்டெழுந்ததால் நாஸ்டாக் (Nasdaq) மற்றும் ஏனைய முக்கிய குறியீடுகள் உயர்ச்சியுடன் முடிவடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *