மெக்சிகோவின் ‘ஜாலிஸ்கோ நியூ ஜெனரேசன் கார்டெல்’ அமைப்பின் தலைவர், படையினரால் கொல்லப்பட்டமைக்கு எதிராக பழிவாங்கல் வன்முறைகள் தொடர்கின்றன.நெமேசியோ ஒசெகுவேரா செர்வாண்டஸ் (எ) “எல் மென்சோ”, பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதற்குப் பழிவாங்கும் விதமாக அந்த அமைப்பினர் நடத்திய தொடர் தாக்குதல்களில், புவேர்ட்டோ வல்லார்ட்டா (Puerto Vallarta) சிறையிலிருந்து 23 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.ஆயுதம் ஏந்திய குழு ஒன்று, வாகனம் ஒன்றினால், சிறை வாசலை மோதித் தகர்த்து 23 கைதிகள் தப்பிச் செல்ல வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.தப்பியோடியவர்களைப் பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.இந்தநிலையில் எல் மென்சோ கொல்லப்பட்டதன் பின்னர் வெடித்த வன்முறையில் 25 தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் உட்பட 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.மெக்சிகோவின் தேடப்படும் மிக முக்கிய குற்றவாளியான இவர், CJNG என்ற சர்வதேச போதைப்பொருள் கடத்தல் அமைப்பை வழிநடத்தி வந்தார்.இந்த அமைப்பு மெக்சிகோ முழுவதும் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலில் ஈடுபடுவதுடன், பாதுகாப்புப் படையினர் மீது மிகக் கொடூரமான தாக்குதல்களையும் நடத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மெக்சிகோவில் போதைப்பொருள் குழுவின் அட்டூழியம்: 23 கைதிகள் தப்பியோட்டம்..
