முக்கிய திருப்பங்களுக்காக, இன்று முதல் ஆரம்பமாகும் ‘துடுப்பாட்டப் போர்’ – யாருக்கு அந்த இடம்?

ஐசிசி டி20 உலகக்கிண்ணத் தொடரின் ‘சுப்பர் 8’ சுற்றில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஹரி புரூக்கின் அதிரடி சதத்தின் உதவியுடன் இங்கிலாந்து பெற்ற இந்த வெற்றி, குழு இரண்டில் உள்ள மற்ற அணிகளின் அரையிறுதி வாய்ப்புகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இதன்படி, தனது முதல் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இலங்கை அணி, தற்போது புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.எனினும், பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோற்றது இலங்கை அணிக்கு ஒரு சிறிய நம்பிக்கையை அளித்துள்ளது.அந்த வகையில் இலங்கை அணி தனது அரையிறுதி வாய்ப்பைத் தக்கவைக்க வேண்டுமெனில் இன்று கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணியை இலங்கை அணி பெரிய ஓட்ட வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்.அத்துடன் நியூசிலாந்து தனது கடைசிப் போட்டியில் இங்கிலாந்திடம் தோற்க வேண்டும். அவ்வாறு நடந்தால் இலங்கை அணி 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு முன்னேறும்.அதேநேரம், நியூசிலாந்து அணி தனது அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால், 5 புள்ளிகளுடன் எவ்வித சிக்கலும் இன்றி அரையிறுதிக்குச் செல்லும்.ஒருவேளை நியூசிலாந்து அணி ஒரு போட்டியில் மட்டும் வென்று 3 புள்ளிகளுடன் இருந்தால், இலங்கை – பாகிஸ்தான் மோதும் போட்டியின் முடிவு மற்றும் ஓட்ட விகிதம் என்பன அந்த அணியின் விதியைத் தீர்மானிக்கும்.பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தெரிவாக வேண்டுமாயின், இலங்கை அணியுடனான தனது கடைசிப் போட்டியில் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும்.பாகிஸ்தான் அவ்வாறு வெற்றி பெறும் பட்சத்தில் நியூசிலாந்து அணி தனது அடுத்த இரு போட்டிகளிலும் தோல்வியடைய வேண்டும்.அவ்வாறு நடந்தால் நியூசிலாந்து அணி 1 புள்ளியுடனும், இலங்கை 2 புள்ளியுடனும் வெளியேற, பாகிஸ்தான் 3 புள்ளிகளுடன் தகுதி பெறும்.நியூசிலாந்து அணி ஒரு போட்டியிலேனும் வென்று 3 புள்ளிகளைப் பெற்றால், பாகிஸ்தானுக்கு ஓட்ட விகிதம் அடிப்படையில் மட்டுமே வாய்ப்பு அமையும்.அந்த வகையில் இன்று நடைபெறவுள்ள இலங்கை – நியூசிலாந்து போட்டியின் முடிவே, இந்த பிரிவில் இங்கிலாந்துக்கு அடுத்ததாக அரையிறுதிக்குச் செல்லப்போகும் இரண்டாவது அணி எது என்பதை ஓரளவுக்கு உறுதி செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *