தமது கோரிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் தரப்பிலிருந்து முறையான பதில் கிடைக்காததைக் கண்டித்து, இன்று (26) நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.இது தொடர்பான தீர்மானத்தை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு தொழிற்சங்கங்கள் கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.தொழிற்சங்கங்களினால் முன்வைக்கப்பட்ட எட்டு கோரிக்கைகள் தொடர்பில் இதுவரை எவ்வித சாதகமான பதில்களும் கிடைக்கவில்லை என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே இருகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. பெப்ரவரி 10 ஆம் திகதி வலுசக்தி அமைச்சர் தலைமையில் நிதியமைச்சில் நடைபெற்ற பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முடிவடைந்தது.மேலும் பெப்ரவரி 16 ஆம் திகதி மின்சார சபையின் தலைவருக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பும் தோல்வியில் முடிவடைந்தது.நியாயமான தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் காட்டப்படும் தொடர்ச்சியான தாமதம் காரணமாகவே, வேறு வழியின்றி இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்குவதாக சங்கங்கள் தெரிவித்துள்ளன.இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தினால் ஏற்படக்கூடிய மின் விநியோகத் தடைகள் அல்லது ஏனைய அசௌகரியங்களுக்கு மின்சார சபை பணியாளர்களோ அல்லது தொழிற்சங்கங்களோ பொறுப்பல்ல என்றும், இதற்கான முழுப் பொறுப்பையும் சம்பந்தப்பட்ட அமைச்சரும் தற்போதைய அரசாங்கமுமே ஏற்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மின்சார சபை பணியாளர்கள் இன்று அதிரடி அடையாள பணிப்புறக்கணிப்பு….
