பழுதடைந்த தனது வாகனத்தை விற்பனை நிலையம் முன்பாகவே தீயிட்டு எரித்த பெண்…

மத்தியப் பிரதேசத்தில் வாழ்வாதாரத்திற்காக வாங்கிய இ-ரிக்‌ஷா அடிக்கடி பழுதானதால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், அதனை விற்பனை செய்த நிறுவனத்தின் முன்னாலேயே தீயிட்டு எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தினக்கூலி வேலையிலிருந்து விடுபட்டு, சுயதொழில் மூலம் முன்னேற வேண்டும் என்ற ஒரு பெண்ணின் கனவு, வீதியில் தீக்கிரையாகி முடிவுக்கு வந்துள்ளது.மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.சிவ்புரி, ஃபக்கர் காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான குடியா மஹௌர் மற்றும் அவரது கணவர் நாராயண் ஆகியோர், சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு இந்திய மதிப்பில் 2.5 இலட்சம் ரூபாய் செலவில் தவணை முறையில் இந்த இ-ரிக்‌ஷாவை வாங்கியுள்ளனர்.மூன்று குழந்தைகளைக் கொண்ட இந்தத் தம்பதி, நிலையான வருமானத்திற்காகத் தங்களின் சேமிப்பு மற்றும் கடனை நம்பி இந்த முதலீட்டைச் செய்துள்ளனர்.வாகனம் வாங்கிய இரண்டு மாதங்களிலேயே பழுதாகத் தொடங்கிவிட்டது.கடந்த நான்கு மாதங்களாக இதனைச் சரிசெய்து தருமாறு விற்பனையாளர்களிடம் கோரிக்கை விடுத்தேன் ஆனால் அவர்கள் என்னைத் திருப்பி அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர்.வாகனம் வீட்டில் முடங்கிக் கிடக்க, நான் மீண்டும் கூலி வேலைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. ஒருபுறம் வருமானம் இல்லை, மறுபுறம் கடனுக்கான தவணைப் பணம் நெருக்கியது என அந்த பெண் தெரிவித்துள்ளார்.இறுதியாக, விற்பனையாளர் நிர்வாகம் வாகனத்தைச் சரிசெய்ய முடியாது எனத் திட்டவட்டமாகக் கூறியதால், விரக்தியின் எல்லைக்குச் சென்ற அந்த பெண், நடு வீதியில் வைத்து தனது இ-ரிக்‌ஷா மீது பெற்றோல் ஊற்றித் தீ வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *