உரிமையாளருக்காக 10 வருடம் கல்லறையில் காத்திருந்த நாய் – நாயின் அன்பு உருவாக்கிய புதிய சட்டம்….

பிரேசிலில் தனது உரிமையாளரின் கல்லறையிலேயே 10 வருடங்களாக வாழ்ந்து வந்த ‘பொப்’ (Bob) என்ற நாயின் விசுவாசத்தால் கவரப்பட்ட அந்நாட்டு அரசாங்கம், செல்லப் பிராணிகளை உரிமையாளர்களின் குடும்பக் கல்லறைகளிலேயே அடக்கம் செய்ய அனுமதிக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.பிரேசிலின் சாவ் பாலோ (São Paulo) மாகாணத்தில் தனது உரிமையாளர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே 10 வருடங்களாக வாழ்ந்து வந்த ‘பொப்’ என்ற நாயின் நினைவாகப் பெயரிடப்பட்ட புதிய சட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது.உரிமையாளரின் இறுதிச் சடங்கின் போது கல்லறைக்கு வந்த ‘பொப்’, அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டது. உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்ற போதிலும், அது மீண்டும் கல்லறைக்கே திரும்பி வந்தது.போர்த்துகேய மொழியில் ‘பொப் கொவெய்ரோ’ (Bob Coveiro – கல்லறை தோண்டுபவர்) என்று அழைக்கப்பட்ட இந்த நாய், அங்கு வரும் துக்கத்தில் இருக்கும் மக்களுக்கு ஆறுதலாகவும் விளையாட்டு நண்பராகவும் மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.கடந்த 2021 ஆம் ஆண்டு வாகனம் ஒன்றில் மோதி உயிரிழந்த இந்த நாய், அது வாழ்ந்த அந்த இடத்திலேயே தனது உரிமையாளருக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.மக்களுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் இடையிலான “உணர்வுப்பூர்வமான பிணைப்பை” (Emotional Bond) அங்கீகரிக்கும் வகையில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.”மரணத்திற்குப் பின்னரும் அன்பு முடிந்து விடுவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ள இந்தச் சட்டத்தை முன்மொழிந்த பிரதிநிதி எடுவார்டோ நோப்ரேகா, செல்லப் பிராணிகள் என்பவை வெறும் விலங்குகள் அல்ல, அவை குடும்பத்தின் ஒரு அங்கத்தவர் எனத் தெரிவித்துள்ளார்.இந்த புதிய சட்டத்தின் மூலம் பிரேசிலின் மக்கள் தொகை கூடிய மாநிலமான சாவ் பாலோவில் உள்ள மக்கள், சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றித் தமது செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனைகளைத் தங்களது குடும்பக் கல்லறைகளிலேயே அடக்கம் செய்ய முடியும்.உலகில் செல்லப் பிராணிகளை அதிகம் வளர்க்கும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில், இந்தச் சட்டம் விலங்கு ஆர்வலர்கள் மற்றும் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *