அமெரிக்காவின் கடுமையான எரிபொருள் முடக்கல் மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக, கியூபாவின் தலைநகர் ஹவானாவில் நடைபெறவிருந்த புகழ்பெற்ற ‘ஹபானோ சிகர் திருவிழா’ (Festival del Habano) காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பெப்ரவரி மாத இறுதியில் ஐந்து நாட்கள் நடைபெறவிருந்த இந்தச் சர்வதேசத் திருவிழா, கியூபா எதிர்கொண்டுள்ள “சிக்கலான பொருளாதாரச் சூழல்” காரணமாக நிறுத்தப்படுவதாக விழா ஏற்பாட்டுக் குழு சனிக்கிழமை அறிவித்தது.கியூபாவின் நீண்டகால நட்பு நாடான வெனிசுவேலாவிலிருந்து வரும் எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா தடுத்து நிறுத்தியதால், குறித்த நாடு முழுவதும் கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.எரிபொருள் பற்றாக்குறையினால் ஒரு நாளைக்கு 18 மணிநேரம் வரை மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.இதனால் மருத்துவமனைகள், நீர் இறைக்கும் நிலையங்கள் மற்றும் பொது போக்குவரத்து முடங்கியுள்ளன.அத்துடன் விமான எரிபொருள் தட்டுப்பாட்டால் பல சர்வதேச விமான நிறுவனங்கள் கியூபாவிற்கான சேவைகளை நிறுத்தியுள்ளன.கடந்த ஜனவரி 3 ஆம் திகதி அமெரிக்க இராணுவம் வெனிசுவேலா முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்ததைத் தொடர்ந்து, அங்கிருந்து நாளொன்றில் கியூபாவிற்கு வரும் சுமார் 35,000 பீப்பாய் எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.கியூபா தலைவர்கள் தம்முடன் பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும், இல்லையெனில் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை நிபுணர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.இது சர்வதேச சட்டங்களை மீறிய “ஒருதலைப்பட்சமான பொருளாதாரக் கட்டாயத்தின் உச்சக்கட்டம்” என்றும், ஒரு நாட்டின் இறையாண்மையை நசுக்கும் செயல் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இதேவேளை, வருடாந்தம் நடைபெரும் சிகர் திருவழாவில் உலகத்தரம் வாய்ந்த கியூப சிகர் (சுருட்டு) தயாரிப்புத் தொழிற்சாலைகளைப் பார்வையிட ஒவ்வோர் ஆண்டும் சுமார் 70 நாடுகளிலிருந்து 1,300 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வது வழக்கமாகும்.தற்போது நிலவும் அசாதாரண சூழல் காரணமாக, சுற்றுலாப் பயணிகளின் அனுபவத்தைப் பாதுகாக்கும் நோக்கில் இவ்விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் கியூபாவின் புகழ்பெற்ற ‘சிகர் திருவிழா’ ஒத்திவைப்பு…
